பூசலார் நாயனார்
பெயர்: பூசலார் நாயனார்
குலம்: வேதியர்/அந்தணர்
குரு பூஜை: ஐப்பசி அனுஷம்
பிறந்த ஊர்: திருநின்றவூர்
முக்தி ஊர்: திருநின்றவூர்
பூசலார் நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். தொண்டை நாட்டில் திருநின்றவூரில் வேதியர் குலத்திலே தோன்றியவர். இவரது காலம் கி பி 7-8ம் நூற்றான்டு என்று அறியப்படுகிறது.
இறைவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்வது ஒன்றே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் பூசலார் நாயனார். சிவபெருமானுக்கு ஒரு அற்புதமான கற்கோவிலை கட்ட எண்ணினார். ஆயினும் போதுமான பொருள் வசதி இல்லாததாலும் அதை திரட்ட எண்ணி முடியாமல் போனதாலும் தன் மனக்கண்ணிலே ஒரு திருக்கோவிலை கட்டி அதில் சிவபெருமானை அமர்த்தி அழகுற காண விரும்பினார்.
மனதிலே சிவனுக்கு கோயில் அமைக்க விரும்பினார். அதற்காக போதுமான பொருள், பணியாட்கள் மற்றும் கருவிகளை மனதிலே சேகரித்தார். ஒரு நல்ல நாள் பார்த்து தியானத்தில் அமர்ந்தார். தம் மனத்திலே சிவபெருமானை எண்ணி நாளும் திருப்பணிகளை மேற்கொள்ள தொடங்கினார். இதற்காக உணவு மற்றும் தூக்கமின்றி இரவு பகலாக தொடர்ந்து தியானத்தில் அமர்ந்து திருக்கோயில் பணிகளை மேற்கொண்டார்.

ஊர் மக்கள் அனைவரும் பூசலாரை வியப்புடன் பார்த்தனர். இவர் என்ன பித்தரோ என்னாயிற்று இவருக்கு என பேசினர். அதைப்பற்றி எதுவும் தெரியாதவராய் தனது மனக்கோயில் கட்டும் பணியை செவ்வனே செய்து வந்தார் பூசலார்.
அனைத்து பணிகளும் இறைவனின் அருளால் நல்ல படியே முடிந்தது. மனத்தின்கண் பூசலார் தான் கட்டிய திருக்கோயிலில் சிவபெருமானை அமர்த்த செய்வதுற்கு ஒரு நல்ல நாளை குறித்தார். அந்நாளிலே சிவபெருமானை அந்த மனக்கோயிலில் வந்து அமருமாறு வேண்டிக்கொண்டார்.
இதற்கிடையில் காஞ்சியைத் தலைநகராக கொண்ட பல்லவ மன்னன் ராஜசிம்மன் (நரசிம்மவர்மன் II (அ) காடவர்கோன்) ஒரு பிரமாண்டமான கற்கோவிலை காஞ்சியில் கட்டி வந்தான். அது தான் கைலாசநாதர் கோவில். பல்லவ மன்னர்களின் கட்டிட கலைக்கு மிகப்பெரும் சான்றாக இன்றளவும் விளங்கும் ஒரு பிரமாண்டமான கோவில் அது.
அவனும் அந்த கோவிலின் திருப்பணி முடிந்து குடமுழுக்கு விழாவிற்கு நாள் குறிக்க எண்ணினான். அந்நாளில் இரவு அவன் கனவில் எம்பெருமான் தோன்றி “நின்றவூர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுவோம்; நீ இங்கு செய்யத்துணிந்த தாபனத்தினை நாளைய தினத்தில் வைத்துக் கொள்ளாது பின்னர் மற்றொரு நாளில் செய்வாயாக” என்று கூறி விட்டு மறைந்தார்.
தூக்கம் கலைந்து எழுந்த மன்னன் தம்மை விட பெரிய கோவில் கட்டிய அந்த பூசலார் யாரோ என எண்ணி மறுநாள் காலையில் திருநின்றவூருக்கு விரைந்தான். மன்னன் தனக்கு தெரியாமல் யார் இந்த அளவிற்கு பெரிய கோவிலை கட்ட முடியும், அதுவும் எம்பெருமானே கூறும் அளவிற்கு பக்தியில் சிறந்த அந்த பூசலார் யாரோ என மன்னன் மிகவும் வியந்து அவ்வூரை அடைந்தான்.
திருநின்றஊரை அடைந்த மன்னன் அங்கே இருந்த மக்களிடம் இவ்விடம் பூசலார் கட்டிய கோவில் எங்குள்ளது என வினவினான். மக்களோ குழம்பியவாறே அப்படி எதுவும் கோவில் இல்லை எனவும் பூசலார் அதோ அங்கே தியானத்தில் அமர்ந்து உள்ளார் பாருங்கள் என்றனர்.
அவர் எப்போதும் அவ்வாறு தியானத்தில்தான் அமர்ந்து இருப்பார் எனவும் தெரிவித்தனர். மன்னனும் சற்று குழம்பியவாறே பூசலார் அருகில் சென்று ‘அய்யா தாங்கள் எழுப்பிய திருக்கோவில் எங்குள்ளது, எம்பெருமானே எனது கனவில் வந்து அதை பற்றி கூறினார்’ என பணிந்து வணங்கி நின்றார்.
பூசலார் மன்னனின் சொல் கேட்டு கண்ணீர் மல்க இறைவனின் கருணையை மன்னனிடம் கூறினார்: தான் இறைவன் சிவபெருமானுக்காக எனது மனதில் ஒரு கோயிலை கட்டினேன். அதை எம்பெருமான் ஏற்று தங்களிடம் வந்து சொல்லி இருப்பதை அறிந்து ‘என்னே அவர் கருணை’ என கரம் கூப்பி நின்றார். மன்னனும் மற்றவர்களும் இறைவனின் திருவிளையாடலை எண்ணி வணங்கி நின்றனர்.
மன்னன் பூசலாரிடம் ஆசி பெற்று சென்றான். பிற்காலத்தில் பூசலார் மனதில் கட்டிய கோயிலை போன்று திருநின்றவூரில் ஒரு கோயிலை கட்டினார். பூசலாரும் எம்பெருமானின் திருவடிக்கு பணி புரிந்து பின்னாளில் அவர் திருவடியில் சேர்ந்தார். பூசலார் அவர்களின் குரு பூஜை ஆண்டு தோறும் ஐப்பசி அனுஷம் அன்று கொண்டாடப்படுகிறது.


Leave a Reply